#Breaking:தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி…தடுப்பூசி கட்டாயம்!

Default Image

மதுரை:பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சிறிது நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது.இதில் 700 காளைகள்,300 வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதையடுத்து,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ,நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்துள்ளார்கள்.

இதனையடுத்து,வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன.அதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து வெற்றி கண்டு வருகின்றனர்.மேலும்,சிறந்த வெற்றியாளர்களுக்கு கார்,பைக், தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் காத்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 4 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில்,மாடுபிடி வீரர்கள்,ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா நெகடிவ் சான்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே சமயம்,1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க 50 பேர் கொண்ட மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண உள்ளூர் மக்கள் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக,வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொலைக்காட்சி,இணையம் வழியாக பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளர்கள்.

இதற்கிடையில்,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு சிறப்புப் பரிசாக கார் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்