#Breaking:சென்னையில் 200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேனாம்பேட்டையில் ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் மழையால் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாசித்த மக்கள், தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.எனினும், மழை நீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடுகள் காரணமாக, தொற்றுநோய் பரவும் ஆபத்து இருப்பதால், அதனை தடுக்க தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் இன்று சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது.தேனாம்பேட்டையில் ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.
முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளும் இந்த முகாம்களில் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.டெங்கு, மலேரியா நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாகவும் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது.