இரண்டு விஜயபாஸ்கர்களும் டெபாசிட்டை இழப்பார்கள் -மு.க. ஸ்டாலின்..!
சசிகலாவால் முதல்வர் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி அவருக்கே மிகப்பெரிய துரோகம் செய்தார் என ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி ,அவரங்குறிச்சி திமுக வேட்பாளர் ரா.இளங்கோவன் , கிருஷ்ணராயபுரம் (தனி) வேட்பாளர் சிவகாமசுந்தரி, குளித்தலை வேட்பாளர் இரா.மாணிக்கத்தை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஸ்டாலின், அனைத்து கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணி தான் வெற்றிபெறும் என்று கூறுகின்றனர். திமுக வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியாவதை ஆளும்கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
முதல்வர் அமைச்சரவையில் இரண்டு விஜயபாஸ்கர் அமைச்சர்கள் உள்ளனர். ஓன்று குட்கா விஜயபாஸ்கர், இரண்டாவது மணல் திருட்டு விஜயபாஸ்கர் இருவரும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து டெபாசிட் இழக்கப் போகிறார்கள். பொய் விளம்பரங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கியால் சுட்டக்கொன்றது அதிமுக அரசு என ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஒரு மோசமான ஆட்சியை பழனிச்சாமி தலைமையில் அதிமுக நடத்தி வருகிறது. ஆளும் கட்சியின் தலையீட்டால் பொள்ளாச்சி குற்றவாளிகள் பாதுகாக்கப்படும் அவலம் நடைபெற்றது. சசிகலாவால் முதல்வர் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி அவருக்கே மிகப்பெரிய துரோகம் செய்தார். எதற்குமே பயன்படாத ஆட்சியை விரட்டி அடிக்கின்றன நாள் தான் ஏப்ரல் ஆறாம் தேதி என்று தெரிவித்தார்.
எந்த திட்டத்தில் எல்லாம் கொள்ளை அடிக்க முடியுமோ அங்கெல்லாம் அதிமுக ஆட்சியாளர்கள் கொள்ளை அடிக்கின்றனர். கொரோனா காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வேலை இழந்தவர்களுக்கு பணி வழங்கப்படும் என முக ஸ்டாலின் பேசினார்.