உதயநிதி vs அண்ணாமலை : “அண்ணாசாலை வர சொல்லுங்க.,” “தனியா நான் மட்டும் வரேன்..,”
நான் அண்ணாசாலை செல்கிறேன் அங்கு வர சொல்லுங்கள் என உதயநிதியும், அண்ணாசாலையில் எங்கு என்று சொல்லுங்கள் நான் தனியாக வருகிறேன் என அண்ணாமலையும் மாறிமாறி சவால் விடுத்து வருகின்றனர்.

சென்னை : பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் இனி Go Back மோடி என சொல்ல மாட்டோம் Get Out மோடி என்று தான் சொல்வோம் என மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னதாக ஒரு கூட்டத்தில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு நேற்று கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
Get Out மோடி :
அதில், உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன். நீ சரியான ஆளாக இருந்தால், உன் வாயில் இருந்து Get Out மோடின்னு சொல்லிப்பாரு, எங்கப்பா முதலமைச்சர், தாத்தா ஐந்து முறை முதலமைச்சர், நான் துணை முதல்வர் என்று சொல்லிப்பாரு பார்க்கலாம். வெளியே போ மோடி என்று சொல்வாராம். சொல்லி பாரு பார்க்கலாம்.
அரசியல் கத்துக்குட்டி நீ. காலையில் 11.30மணிக்கு தான் உன் மேல் வெயிலே படும். சூரியனை பார்த்து துப்பினால் அந்த எச்சில் உன் மேல் விழும். 3.30மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, யோகா செய்து, ஐந்து மணிக்கு பைலை திறந்து இந்த நாட்டை ஆட்சி செய்கிற ஆளுகிட்ட, 11 .30 மணிக்கு சூரியன் மேல் விழும் போது எழுகின்ற உனக்கு இவ்வளவு திமிர் இருந்தால், நாட்டுக்காக உழைத்து முன்னேற்றும் சாதாரண மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? என ஆவேசமாக பேசியிருந்தார்.
அண்ணாசாலை வர சொல்லுங்க..,
இதனை அடுத்து இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. அண்ணாமலை, பிரச்னையை திசை திருப்ப பார்க்கிறார். 2018இல் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதே சுவற்றை எல்லாம் உடைத்துக்கொண்டு வந்தார். எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு , கருப்பு கொடி காட்டினார்கள். அண்ணாமலை ஏற்கனவே அறிவாலயம் முற்றுகையிட போகிறேன் என்று கூறினார். வேண்டுமென்றால் அடுத்து நான் அண்ணாசாலை செல்கிறேன். அங்கு வர சொல்லுங்கள்” என கூறிவிட்டு சென்றார்.
தனியா வரேன்..,
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ” அண்ணாசாலையில் எங்கே என்று சொல்லுங்கள். அண்ணாசாலையில் பொத்தாம்பொதுவாய் எங்கே? நீங்க இடத்தை குறிப்பிடுங்க. நாள் நேரம் இடம் திமுககாரங்களே சொல்லட்டும். நான் தனியாக வருகிறேன். என்கூட பாஜக தொண்டன் ஒருவன் வரமாட்டான். நீங்கள் உங்கள் தொண்டர் படை, காவல்துறை கொண்டு முடிந்தால் என்னை தடுத்தி நிறுத்தி பாருங்கள்.
திமுகவுக்கு சவால்
திமுககாரங்களுக்கு ஒரு சவால், இன்று இரவு முழுக்க கூட நீங்க Get Out மோடி என பதிவிடுங்கள். நாளை காலை 6 மணிக்கு நான் Get Out ஸ்டாலின்-னு டிவீட் போடுவேன். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ஸ்டாலின் நீங்க தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என பதிவிடுவேன். காலையில் ட்ரெண்ட் செய்ய நான் ஆரம்பிப்பேன். இன்னைக்கு ஒருநாள் திமுககாரங்களுக்கு.” என கூறினார் அண்ணாமலை.