‘அவர் நடிச்சுக்கிட்டே இத பண்ணிருக்கலாம்’ – தவெக தலைவர் விஜய் பற்றி மனம் திறந்த போஸ் வெங்கட்!
சமீபத்தில் வெளியான விஜயின் கோட் திரைப்படத்தை 4 முறை என் குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்தேன் என்று நடிகர் போஸ் வெங்கட் கூறியுள்ளார்.
சென்னை : தற்போது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கண்களும் தவெக கட்சியின் மாநாட்டின் மீது தான் இருக்கிறது. விஜய் அம்மாநாட்டில் என்ன பேசுவார்? அவரது கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பது தான், தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது.
வரும் ஞாற்றுக்கிழமை அன்று தவெக கட்சியின் முதல் மாநாடானது நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக விக்ரவாண்டியில் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தவெக கட்சியின் தலைவரான விஜய் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சமீபத்தில், போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமலின் நடிப்பில் ‘சார்’ திரைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனது, ப்ரோமோஷனுக்காக தனியார் யூடுயூப் சேனலுக்கு அப்படத்தின் இயக்குநர் போஸ் வெங்கட் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், விஜய் நடித்துக் கொண்டே இந்த அரசியல் பணிகளைச் செய்திருக்கலாம் எனக் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் பேசிய போது, “விஜயின் கோட் படத்தை நான் எனது குடும்பத்துடன் 4 முறை பார்த்தேன். ஆனால், நாங்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டோம், இருந்தாலும் தற்போதைய சூழலில் அவரை விட ஒரு சிறந்த நடிகர் யாருமில்லை.
எனக்கு அவர் படம் வந்தால் போதும், ஒரு காலத்தில் எப்படி ரஜினி மீது இவ்வளவு ஈர்ப்பு இருந்தது. ஆனால், இன்றைக்கு என்னை மிகவும் எனர்ஜியாக வைத்திருக்கக் கூடிய ஹீரோ என்றால் அது விஜய் தான். அதனால், என்னைப் பொறுத்த வரையில் விஜய், இன்னும் ஒரு 20 வருடங்கள் ஹீரோவாக இருந்து கொண்டே இந்த அரசியல் ஈடுபாடை செய்திருக்கலாம்.
அரசியலில் அதிகம் செலவு செய்ய வேண்டும், கோடிகளில் பணம் செலவாகும். தற்போது அவர் மாநாடு நடத்தவுள்ளார், அதற்கு எப்படியும் 60 முதல் 70 கோடி வரையில் செலவாகும். இப்படி ஒரு நான்கு மாநாடு நடத்தி காசு இல்லாமல் போனால் அவ்வளவு தான். அதற்கு அவர் நடித்துக் கொண்டே இந்த பணியைச் செய்திருக்கலாம்”, என போஸ் வெங்கட் கூறியிருந்தார்.