முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது!
சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என இன்று அதிகாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்த நிலையில், செல்போனில் மிரட்டல் விடுத்த கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார்.
முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இசக்கிமுத்துவை கைது செய்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த உச்சம்பாறையை சேர்ந்த 30 வயதான இசக்கிமுத்து என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, இசக்கிமுத்துவை காவல்துறை கைது செய்தது விசாரித்ததில் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.