முதலமைச்சர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.! துபாயில் இறங்கும் வரை பதற்றம்.!
சென்னை : நேற்றிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். அவர் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு முன்னர் முதல்வர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி இ-மெயில் வாயிலாக வந்துள்ளது.
இந்த விமான நிலைய ஆணையத்திற்கு வந்த இந்த மிரட்டல் செய்தி பற்றிய தகவலானது விமானம் புறப்பட்ட பின்னர் தான் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளதாக தெரிகிறது. முதலமைச்சர் பயணித்த விமானமானது நேரடியாக அமெரிக்கா செல்லாமல் துபாய் வழியாக தான் பயணம் செய்கிறார் என்பதால் துபாயில் விமானம் தரையிறங்கும் வரையில் அதிகாரிகள் ஒருவித பதட்டத்துடன் காத்திருந்தனர்.
பின்னர் இன்று அதிகாலை 2 மணியளவில் துபாயில் விமானம் பத்திரமாக இறங்கிய பின்னர் தான், இங்கு விமான நிலைய ஊழியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர். முதலமைச்சர் பயணம் செய்யும் விமானம் என்பதால் முன்னதாகவே 3 கட்ட சோதனைகளுக்கு அந்த விமானம் உட்படுத்தப்பட்டு இருந்ததால், விமானம் பாதிவழியில் தரையிறக்கப்பட வேண்டிய நிலை இல்லாத சூழல் ஏற்பட்டது.
தற்போது, இந்த இ-மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது? யார் அனுப்பினார்கள் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இவ்வாறு பல்வேறு நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள், கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரையில் 17 நாட்கள் அமெரிக்காவில் தங்கி, சான் பிராசிஸ்கோ முதலீட்டளர் மாநாடு, தமிழ் சங்கத்தினருடன் சந்திப்பு, சிகாகோவில் வெளிநாடு வாழ் தமிழர்களுடன் சந்திப்பு, தொழிலதிபர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார் .