தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் – ஈபிஎஸ்

Default Image

போதைப் பொருள் கலாச்சாரம் போன்று, வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது என ஈபிஎஸ் அறிக்கை.

கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொண்டு தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இதுகுறித்து, காவல்துறையினர் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இது சமந்தமாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச செயல்களில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் எனவும் தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது, சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகக் காவல் துறை சட்டப்படி, நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவின் ஆட்சியில் இருந்த நிலை. ஆனால், இந்த விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுகின்றன.

இதுபோன்ற நிகழ்வுகளினால், மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்கின்றனர். குறிப்பாக, பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். கடந்த வாரத்தில், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் போன்று, வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது. எங்களது ஆட்சியில் சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட்ட காவல் துறை தற்போது செயலற்று உள்ளது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மாய உலகம் ஒன்றில் வாழும் ஒரு நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை தமிழகம் பெற்றுள்ளது வேதனைக்குறியது.

எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. தனி மனிதரின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஆளும் திமுக-வினர் உருவாக்கி வருகின்றனர். இது அமைதியான தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தான போக்காகும். இனியாவது இந்த விடியா திமுக அரசு, வெடிகுண்டு கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தி, தமிழக மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்