கமல் ஹாஸன் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர், முற்போக்குவாதி என்றெல்லாம் புளகாங்கிதமடைந்திருந்தவர்கள் கூட நேற்றைய அவரது பேட்டியைப் பார்த்து கொந்தளித்துப் போய்விட்டார்கள். காரணம் கமல் பேசியவை, அக்கிரமமான பல விஷயங்களுக்கு சப்பைக் கட்டு கட்டிய விதம் எல்லாமே, கமல் ஹாஸன் மீது பக்கெட் நிறைய கருப்பு மையைக் கொட்டியிருக்கிறது.
‘என்னாச்சு இந்த கமலுக்கு… என்னதான் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கோடிகளில் சம்பளம் வாங்கியிருந்தாலும், அவரை இந்த நிலைக்கு உயர்த்தி வெகுஜனங்களுக்கு விரோதமாக வார்த்தைகளை உதிர்க்கலாமா? என்பது பலரது கேள்வி.
காயத்ரி என்பவருக்கு சாதி வெறி இருக்கிறதோ இல்லையோ… ஆனால் அவர் பயன்படுத்திய சேரி பிஹேவியர் என்பது எவ்வளழு கீழ்த்தரமான அர்த்தத்தில் பேசப்பட்ட வார்த்தை என்பது கமலுக்குத் தெரியாததா? ‘ஆமாம், அவர் சொன்னது தவறுதான். அவர் மன்னிப்புக் கேட்பார்’ என்று சொல்லியிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் பரபரப்பு குறைந்து, நிகழ்ச்சியின் டிஆர்பி பாதாளத்துக்குப் போய்விடுமே… அந்த பரபரப்பை அப்படியே நீடிக்க வைத்திருப்பதுதானே கமல் ஹாஸன் பொறுப்பு. அதனால்தான் காயத்ரி சொன்ன சேரி பிஹேவியரை நியாயப்படுத்துகிறார்.
என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசும் நபரல்ல கமல்ஹாஸன். நன்கு தெரிந்தேதான், கோடிக்கணக்கான மக்கள் ரசிக்கும் கிரிக்கெட்டுடன் இந்த கேடுகெட்ட பிக் பாஸை ஒப்பிடுகிறார்.
பரபரப்பு உச்சத்துக்குப் போக வேண்டுமா… இருக்கவே இருக்கார் ரஜினி. சிஸ்டம் சரியில்லை என்று முதலில் கமல்தான் சொன்னாராம். கமல் மறந்திருக்கக் கூடும், இதனை முதல் முதலில் பகிரங்கமாக ஆனந்த விகடன் பேட்டியில் சொன்னவர் ரஜினிகாந்த். ஆண்டு 1993. அப்போது நடந்து கொண்டிருந்தது சர்வ வல்லமை பொருந்திய ஜெயலலிதா ஆட்சி!
கோடிகளில் சம்பளம் கொடுத்திருக்கும் சேனல் விசுவாசத்தை விட, தனது நண்பனின் மகள், சாதித் திமிர் பிடித்த காயத்ரி ஜெயராமைக் காப்பதில் கமலுக்கு ஒரு படி அக்கறை அதிகமாகவே தெரிகிறது என வெளிப்படையாக திட்டும் அளவுக்குப் போய்விட்டது.