நீதிபதியை சூப்பர்வைசர் பணிக்கு அழைத்த தனியார் நிறுவனங்கள் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Default Image

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு சூப்பர்வைசர் பணிக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பிய 5 தனியார் நிறுவனங்கள் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன். இவரின் வில்லிவாக்கம் வீட்டு முகவரிக்கு, திருப்பூர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் ரெக்ரூட் மெண்ட், திருச்சி ஏர்டெக் சொலுஷன்ஸ், திருப்பூர் வால்வோ இண்டஸ்ட்ரியல் ரெக்ரூட் மெண்ட், கோவை டைமண்ட் இண்டஸ்ட்ரியல் ரெக்ரூட் மெண்ட் ஆகிய ஐந்து நிறுவனங்களிடம் இருந்து சூப்பர் வைசர் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும்படிஅழைப்புக் கடிதங்கள் வந்துள்ளன.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போது 250 ரூபாய் முதல் 750 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஒரு நிறுவனத்தின் தொலைபேசி எண்ணில் நீதிபதி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த போனை பாரதி ராஜா என்பவர் எடுத்துள்ளார். அவருடன் பேசியபோது, ராஜீவ் விகாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் தானும் பணி நியமன ஆணை பெற்றதாகக் கூறியுள்ளார். மேலும், அந்த நியமன ஆணையில் இந்திய நகர்ப்புற அமைச்சகத்தால் பணி வழங்கப் பட்டுள்ளது என்றும், தமிழக அரசின் இலட்சினையும் இடம் பெற்றுள்ளன. இதை தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு சென்ற நீதிபதி வைத்தியநாதன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க அனுமதி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ஞாயிறன்று (அக். 1) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: உயர்நீதிமன்ற நீதிபதிக்கே பணி நியமன உத்தரவு வழங்கும் அளவுக்கு இந்த நிறுவனங்கள் சக்தி படைத்தவைகளாக இருக்கின்றன. அப்பாவி இளைஞர்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலி நேர்முகத் தேர்வு நடத்தி, பணம் வசூலிக்கும் இந்த மோசடி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுஒரு பெரிய ஊழல். எனவே, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை மாநகர காவல் ஆணையர், சைபர் கிரைம் துணை ஆணையர், கோவை மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர்கள், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர், சைபர் கிரைம் கண்காணிப் பாளர் ஆகியோர் வரும் 13ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.
ஐந்து நிறுவனங்களும் எத்தனை நேர்முக அழைப்புக் கடிதங்களை அனுப்பியுள்ளன?. எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் வசூலித்துள்ளன?. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் எத்தனை பேர்?. இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் சின்னங்கள் எப்படி இவர்களால் பயன்படுத்தப்படுகிறது?. இதுபோல போலி நேர்முகத் தேர்வு நடத்தி மோசடி செய்த கும்பல் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஐந்து நிறுவனங்களும் யாரிடமும் பணம் வசூலிக்கக் கூடாது. வழக்கு 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்