வரலாற்றில் இன்று-மருது சகோதரர்களும் அவர்களது குடும்பத்தாரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள்
அக்டோபர் 24, 1801. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது
மருது சகோதரர்களுடைய வீரமும், நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக, ஒட்டுமொத்த தமிழகமும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய வீர வரலாறு ஆகும் .