தமிழக அரசு மைதானங்களுக்கு வரும் அனைவருக்கும் கட்டணம் !வசூல் செய்ய முடிவு …
தமிழக அரசு பல்வேறு விதமான வகையிலும் வசூல் செய்து வருகிறது. விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டணம் விதித்துள்ளது. இந்த கட்டண வசூல் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கட்டணமாக குறைந்தபட்சம் மாதம் ரூ.250 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், 17 பல்நோக்கு விளையாட்டு கூடங்கள், 25 மினி விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. இங்கு, சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க, ஆணையம் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
இதற்கு மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் அனைத்து விளையாட்டு அரங்கு மற்றும் மைதானங்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. ஆனால் அரசோ கட்டண வசூலில் ஈடுபடுகிறது என குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதனை சரி செய்யவே பயனாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது. இந்த கட்டணம், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து என வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநகராட்சி பகுதியில் உள்ள மைதானத்தில், பேட்மின்டன் விளையாட மாதம் ரூ.100 , கிராமங்களில் ரூ.300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இன்று முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது.