விடைபெற்றார் வித்யாசாகர் ராவ் !! சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா முதல்வர் பங்கேற்பு
தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதையடுத்து , இது வரை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று பிரியா விடை பெற்றார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். தமிழக கவர்னராக பன்வாரிலால் நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக இன்று பிற்பகலில் அவர் சென்னை வர உள்ளார்.
இதனையடுத்து தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ், இன்று மும்பை புறப்பட்டுச் சென்றார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்ர்சர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி ராஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் வித்யாசாகர் ராவிற்கு பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்தனர்.
கடந்த ஓராண்டாக தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ், தனக்கு ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.