ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: முன்னாள் மாணவர் வெறிச்செயல்
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முன்னாள் மாணவர் ஒருவர் வகுப்பறையில் புகுந்து ஆசிரியையை அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த ஆசிரியைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவர், சோகண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். யோகேஷ் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை பூங்கொடியின் பரிந்துரையின்பேரில், யோகேஷ் இந்த ஆண்டு பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.
சில மாதங்கள் கழித்து நேற்று பள்ளிக்குச் சென்ற யோகேஷ், வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை பூங்கொடியை அரிவாளால் வெட்டினார். தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பூங்கொடிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் யோகேஷை ஆசிரியர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரணையை அவரிடம் மேற்கொண்டு வருகின்றனர்.