திருச்சியில் பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த தூத்துக்குடி போலி சாமியார் கைது…!
திருச்சி: திருச்சி மேலபுலிவார்டு ரோட்டை சேர்ந்த கவிதா(36).(பெயர் மாற்றம்) எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர் தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் (என்ற) கண்ணனை (45) அணுகியுள்ளார். சில பூஜைகள் செய்தால் தொழில் அபிவிருத்தி அடையும் என நம்பிக்கை தெரிவித்த மாரியப்பன், திருச்சிக்கு வந்து சில பூஜைகள் செய்துள்ளார். அதன்பின் மாரியப்பன் செய்து வந்த ‘ஷிப்பிங்’ தொழிலில் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய கவிதா ரூ.5 லட்சத்தை மாரியப்பனிடம் வழங்கினார்.
தொழில் மேலும் உச்சமடைய வேண்டும் என்றால் தேக சுத்தி, நிர்வாணபூஜை நடத்த வேண்டும் என்று மாரியப்பன் கூறினார். பூஜை முடிவில் தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆடிப்போன கவிதா, மாரியப்பனிடம் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை தரமறுத்த மாரியப்பன், கவிதாவுக்கு நேரிலும், போன் மூலமும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.மேலும், மாரியப்பன் மகள் சிதம்பரவனிதாவும் கவிதாவை மிரட்டி உள்ளார். இதுகுறித்து கவிதா போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார். கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மாரியப்பன் திருச்சியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் மாரியப்பன் போலி சாமியார் என்பதும், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இதுபோல மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இவர் மீது ஏதேனும் புகார்கள் உள்ளனவா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் தான் இவரிடம் சிக்கி உள்ளனர் என்பதால், குடும்பத்துக்கு பயந்து வெளியே வராமல் உள்ளனர். உறவினர் பெண்ணே புகார் கொடுத்து தற்போது போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.