பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ருசியாக சமைத்து போட போயஸ் கார்டன் சமையல்காரர்கள் மீது சிறிய வழக்குகள் போட்டு சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மைக்ரோ ஓவன், பிரிட்ஜ், காபி மேக்கருடன் அதிநவீன மாடுலர் கிச்சனும் சிறையிலேயே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் பெங்களூரு சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
விஐபிகளுக்கான சலுகை
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் அவரது அண்ணியான இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் விஐபிகளுக்கான சலுகைகள் வழங்கப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் சிறை நிர்வாகம் இதனை மறுத்து வந்தது.
உயர் அதிகாரிகளுக்கு கடிதம்
இதுதொடர்பாக தனது மேல் அதிகாரிகளுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் சசிகலா மற்றும் பல தண்டனை கைதிகளுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
லஞ்சம் பெற்ற டிஜிபி
டிஜிபி சத்யநாராயணா ராவ் அடுத்த மாதம் ஓய்வு பெற இருக்கிறார். இந்நிலையில், அவர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு எழுந்திருப்பது அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் தர்ணா: இந்நிலையில், சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கிய சிறைத்துறை அதிகாரிகளை கண்டித்து, பெலகாவி, தார்வார் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் நேற்று மாலை சிறைக்குள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஆளும் அரசுக்கு தொடர்பா ?
இந்த விவகாரத்தின் பின்னணியில் மத்திய அரசின் அழுத்தமும் இருக்கிறது. சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் வசதிகள் குறித்தும் அவரை சந்தித்துவிட்டுச் செல்பவர்கள் பேசுகின்ற விஷயங்கள் குறித்தும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் குறிப்பெடுத்து வந்தனர். கூடவே, கர்நாடக அரசின் உதவியோடு சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் குறித்தும் கண்காணித்தனர். ‘தமிழக காங்கிரஸ் பிரமுகர் மூலமாக, கர்நாடக காங்கிரஸ் அரசில் உள்ளவர்களுக்கு சில வேண்டுகோள்கள் சென்றுள்ளன. அதன்படியே சசிகலாவுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன’ என மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளனர். தற்போது நடந்த ரெய்டைத் தொடர்ந்து, பெண் அதிகாரி அனுப்பிய பதிலும் வெளியில் கசிந்துவிட்டது. இதன்மூலம், குற்றவாளிக்கு உதவிய காங்கிரஸ் அரசு என்ற கெட்ட பெயரும் ஏற்பட்டுவிட்டது. கர்நாடகாவில் உள்ள ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் கூடுதல் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், வேறு சிறைக்கு மாறுவது உள்பட சசிகலாவின் எந்த கோரிக்கையும் எளிதில் நிறைவேற வாய்ப்பில்லை. இனி பார்வையாளர் வருகையும் கட்டுப்படுத்தப்படும்” என்கின்றனர் கர்நாடக அ.தி.மு.கவினர்.