கந்துவட்டி மரணங்களுக்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திடுக! சிபிஎம் மாநில குழு தீர்மானம்

Default Image

சிபிஎம் மாநிலக்குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் வருமாறு:நெல்லை மாவட்டம், காசிதர்மத்தைச் சார்ந்த இசக்கிமுத்து என்பவரின் குடும்பம் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ள சம்பவம் தமிழகத்தையே பதற வைத்துள்ளது. இதில் இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு பலியாகியுள்ளனர். இசக்கிமுத்து கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இந்த கொடூர நிகழ்வு குறித்து ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.ரூ. 1,45,000/- கடன் வாங்கியதற்கு எட்டு மாத காலத்தில் ரூ. 2,34,000 கொடுத்த பின்பும் கடன் கொடுத்தவர் தொடர்ச்சியாக மிரட்டியிருக்கிறார். அச்சன்புதூர் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்த பிறகும் காவல்துறை உருப்படியான எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாலும், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தும் மிரட்டல்நிற்காததால் குடும்பமே தீக்குளித்து பச்சிளங்குழந்தைகள் உட்பட துடிதுடித்து இறந்திருக் கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைகண்காணிப்பாளர், காவல்நிலைய அதிகாரிகள் அனைவரிடமும் புகார் செய்த பிறகும் காவல்துறை கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இருந்ததன்காரணமாகவே இந்த கொடூரமான மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவர்களது மரணத்திற்கு இவர்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
கந்துவட்டி ஒழிப்புச் சட்டம்எங்கே போனது?
நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியால் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மாவட்ட நிர்வாகம், காவல்நிலையங்கள் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவான நிலை எடுப்பதே இந்த மரணங்களுக்கு காரணம். இந்த மரணங்களை கொலை என்றே கொள்ள வேண்டும். இதற்கு முன்பும் கந்துவட்டி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஆயினும் கந்துவட்டியை ஒழிப்பதற்கு 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட “கந்துவட்டி ஒழிப்புச் சட்டம்” எந்தவகையிலும் அமல்படுத்தப்படாத நிலை நீடிக்கிறது. கடந்த காலத்தில் கடமை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததும் இத்தகைய உயிரிழப்புகளுக்கான காரணமாகும்.
இந்த குடும்பத்தின் தற்கொலைக்கு காரண மானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், உரிய முறையில் புகார் செய்த பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அச்சன்புதூர் காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டுமென்றும், கந்துவட்டிக்காரர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் மூலம்கந்துவட்டியை ஒழிக்க தமிழக அரசுஉரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும்,கந்துவட்டி ஒழிப்புச் சட்டம் கடந்த 14 ஆண்டு காலமாக எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்பதுகுறித்து பரிசீலித்து சட்டத்தை கறாராக நடை முறைப்படுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட்கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்