தொகுதி பங்கீடு இழுபறி…நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை..!
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சியினர் விருப்பமனு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் நேர்காணல், தொகுதி பங்கீடு போற்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தொகுதி பங்கீட்டில் அதிமுகவில் உள்ள தேமுதிக உடன் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23, பாஜகவிற்கு 20 தொகுதிகளுகும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக, தேமுதிக இடையே 5 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 3 கட்ட பேச்சுவார்த்தை இறுதி முடிவு எட்டப்படாமல் முடிந்தது. பின்னர், 4 -ம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 23 தொகுதிகள் கேட்டு வந்த தேமுதிக 18 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தததாக கூறப்பட்டது.
அதிமுக சார்பில் 16 முதல் 17 தொகுதி மற்றும் ஒரு எம்.பி சீட் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக உடனான தொகுதிப்பங்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், நாளை மாவட்ட செயலாளர்களின் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடக்கும் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. தேமுதிக நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட பின்னர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.