போண்டாவில் பிளேடு! அதிர்ச்சியில் உறைந்த எஸ்.ஐ!
திண்டுக்கல்லில் தனது பேத்திக்கு வாங்கிய போண்டாவில் முழு பிளேடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த எஸ்.ஐ. கனகராஜ்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில், கனகராஜ் (57) என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் விளாம்பட்டி காவல்நிலைய குடியிருப்பு வளாகத்தில், தனது மகன் மற்றும் இரண்டு பேத்திகளுடன் அங்கு வசித்து வருகிறார். இந்நிலையில்,கனகராஜ் அங்குள்ள நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையில் வடை மற்றும் போண்டா ஆகியவற்றை வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது பேத்திக்கு கொடுக்கப்பட்ட போண்டாவை சாப்பிடுவதற்காக இரண்டாக பிரித்த போது, அந்த போண்டாவிற்குள் முழு பிளேடு இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த சிறுமி தனது தாத்தாவிடம் பிளேடு இருப்பதாக கூறியுள்ளார். விஷயம் தொடர்பாக நிலக்கோட்டை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பின் கனகராஜ் போண்டா வாங்கிய கடைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். கடைக்காரரிடம் விசாரித்த போது, மாவு பாக்கெட்டை பிரிக்க உபயோகம் செய்த பிளேடு, அஜாக்கிரதையாக செயல்பட்டதால் தவறுதலாக மாவிற்கு விழுந்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, போண்டா தயாரித்த கடைக்காரரிடம் எச்சரிக்கை செய்துள்ளனர். இனியும் இது போன்று நடந்தால், எந்த கடையில் இருந்து உணவு தயாரானாலும், சம்பாந்தப்பட்ட நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கையை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கனகராஜ் மீதுள்ள வன்மத்தால் இவ்வாறு செயல்பட்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.