கருப்பு பணம் பரிமாற்றம்! அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி ஐ.ஜியிடம் புகார்!
மதுரையில் நாளை அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் பேருந்துகள் கார்கள் மூலம் மதுரைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால், ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாநாட்டில் சுமார் 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. அந்தவகையில் 15 லட்சம் பேருக்கும் நாளை காலை முதல் மாலை உணவளிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில், பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. மாநாடு நடத்த தடை விதிக்கக்கோரியும் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதாவது, மதுரையில் அதிமுக நடத்த உள்ள மாநாட்டுக்கு தடைகோரி உயர் நீதிமன்றக் கிளையில் சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். விமான நிலையத்தின் அருகில் மாநாடு நடக்க உள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்கு மாநாடு நடத்த விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மக்கள் அதிகமாக வருவதால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காரணத்தால் மாநாட்டிற்கு அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த மனுவை தள்ளுபடி செய்த மாநாட்டிற்கு தடையில்லை என உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றம் கிளை. இந்த நிலையில், அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி ஐஜியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிமுக நடத்தும் மாநாட்டில் கருப்பு பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக தென்மண்டல ஐஜியிடம் சீர்மரபினர் நலசங்கத்தினர் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிபந்தனையை மீறி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சீர்மரபினர் நலசங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். மாநாட்டுக்கு கூலிப்படையை வரவழைத்து மதுரை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுதல் நிலை உள்ளது என்றும் அதிமுக மாநாட்டுக்கு வரும் வாகனங்களை தணிக்கை செய்து அபராதம் விதிக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.