ஆளுநர் ரவிக்கு எதிராக சேலத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!

rn ravi

சேலத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போராட்டம்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா ஆளுநர் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

இந்த சமயத்தில் இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கவிருக்கிறார். அதுபோல் சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் பேசும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஆளுநர் ரவி வடலூரில் பேசியிருந்ததும், சர்ச்சையான நிலையில், பல்வேறு தரப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழலில் இன்று சேலம் பெரியார் பல்கலைகழகத்துக்கு பட்டமளிப்பு விழா நிகழ்வுக்கு வருகை புரியும் ஆளுநர் ரவியின் வருகையை முன்னிட்டு, திராவிட விடுதலைக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சேலத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட விடுதலை கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அமைச்சரவையின் கொள்கைகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேயம், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளனர். பெரியார் பல்கலைக்கழகம் அருகே சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நடைபெற்று வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்