“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
இந்திய அரசியலமைப்பை - கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக குறித்து விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ” பா.ஜ.க.வைப் பொருத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது… நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும்! இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள்.
இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும். இது, பா.ஜ.க. என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்களைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பா.ஜ.க.வும் – பா.ஜ.க.வுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது.
இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய அரசியலமைப்பை – கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். ஏன் என்றால், நான் முன்பே சொன்னது போன்று, பா.ஜ.க.வின் செயல்திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள்.
அதற்கு துணையாகப் பல எடுபுடிகளை பேச வைப்பார்கள்.தங்களின் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்தே பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களைக் கட்டமைப்பார்கள்.அளவில்லால் அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள்.பச்சையான பொய்களால் கொச்சைப்படுத்துவார்கள். பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதையெல்லாம் கடந்துதான் நாம் போராட வேண்டும் வெற்றி பெற வேண்டும்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.