முதல்வராக ஒரு கருத்து.. பிரதமரான பிறகு ஒரு கருத்து.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றசாட்டு.!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் குரல் (Speaking4India) எனும் பெயரில் தனது எக்ஸ் (த்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் ஓர் குரல் பதிவேட்டினை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக இரண்டு முறை இம்மாதிரியான பதிவுகளை அவர் வெளியிட்டு உள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது முறையாக இந்தியாவின் குரல் என குரல் பதிவை வெளியிட்டு உள்ளார். இதில் மத்திய அரசு பற்றி பல்வேறு விமர்சனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் வைத்து உள்ளார்.
அவர் கூறுகையில் கடைசியாக வெளியான சிஏஜி அறிக்கை பற்றிய வீடியோ வெளியான பிறகு, சிஏஜி அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுவே சிஏஜி அறிக்கையை ஆளும் பாஜக அரசு உண்மை என ஒத்துக்கொள்வதற்கான ஆதாரம் என குற்றம் சாட்டினார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!
மேலும், திமுகவின் பிரதான கொள்கையே மாநில சுயஆட்சி என்பது தான். பாராளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக திமுக விளங்குகிறது. நமது நாட்டில் பல்வேறு மாதங்கள், சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளை பின்பற்றும் மக்கள் உள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பல்வேறு பூக்கள் கொண்ட பூந்தோட்டம் தான் இந்தியா.
குஜராத் முதல்வராக இருந்து பிரதமர் பொறுப்பிற்கு சென்ற உடன் பிரதமர் மோடிக்கு இந்திய அரசியல் அமைப்பின் முதல்வரிகளே பிடிக்கவில்லை. எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்த ஒன்றியம் தான் இந்தியா எனும் கூற்றே பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை. குஜராத் முதல்வராக இருந்த போது, மாநில உரிமைகளை பற்றி பேசிய பிரதமர் மோடி, பிரதமரான பிறகு மாநிலங்களை ஒழித்து அதனை முனிசிபாலிட்டி (நகராட்சி நிர்வாகம்) போல மாற்ற நினைக்கிறார்.
குஜராத் முதல்வராக இருந்த போது, டெல்லியை மையப்படுத்தி திட்டங்களை வகுக்க கூடாது. மாநிலங்களையும் கேட்க வேண்டும் என கூறிய பிரதமர் மோடி, தற்போது மாநில திட்டங்களை நிறைவேற்ற கூட மத்திய அரசை நாட வேண்டிய நிலைமையில் அரசை வைத்துள்ளார். முன்னர் மாநில முதல்வர்களை அழைத்து ஆலோசனை நடத்திய மத்திய அரசு தற்போது அதனை கலைத்துவிட்டு, நிதி ஆயோக் எனும் அதிகாரமில்லா ஒரு அமைப்பை வைத்து திட்டங்களை வகுக்கிறது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள அரசுகள் மீது பாஜக அரசு தொடர்ந்து ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது. கட்சியை 2,3 ஆக பிரிப்பது என ஆட்சியை குறுக்கு வழியில் கைப்பற்ற பாஜக முயல்கிறது. மாநில அரசுக்கு முறையாக தரவேண்டிய ஜிஎஸ்டி பங்கு தொகையை தர மறுக்கிறது. இதுவரை 85 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஜிஎஸ்டியில் தமிழக பங்கு தொகை நிலுவையில் உள்ளது என பல்வேறு குற்றசாட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.