இ.பி.எஸ் பற்றி அவதூறு., அண்ணாமலை மீது காவல்துறையில் பரபரப்பு புகார்.!
மதுரை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் பாஜக அரசியல் தலைவர்களிடையே வார்த்தை மோதல் என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த மோதலானது, மேடைப் பேச்சுக்களில் கூட சில கடுமையான சொற்களை பேசும் அளவுக்கு வலுத்து வருகிறது. இதனால் உட்கட்சியில் இருப்பவர்களே “கடுமையான சொற்களை பயன்படுத்த வேண்டாம்” என அறிவுரை கூறி வருகின்றனர்.
அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஓர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில், “நாங்கள் கடுமையாக உழைத்து உயர் பொறுப்புகளுக்கு வந்துள்ளோம். அண்ணாமலை உழைக்காமல் உயர் பொறுப்புகளுக்கு வந்துள்ளார். அதனால் தலை கால் புரியாமல் ஆடுகிறார்” என விமர்சனம் செய்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், “எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கினார். அப்படிப்பட்டவர், விவசாயி மகனான, 10 ஆண்டுகள் காவலத்துறை அதிகாரியாக ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத என்னைப்பற்றி பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆகியோர் தலைமைவகித்த அதிமுகவை தற்போது ‘கிணற்று தவளை’ போன்றோர்கள் வழிநடத்தி வருகிறார்கள்.” என கடுமையாக விமர்சித்தார்.
அண்ணாமலையின் இப்படியான கடுமையான விமர்சனங்கள் குறித்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” ஒவ்வொருவருக்கும் பதில் சொல்வதற்கு ஒரு பாணி இருக்கும். அதுபோல பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவது ஒரு பாணி. என்னை பொறுத்தவரையில், தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த மரியாதையை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கை.” என அட்வைஸ் செய்து இருந்தார்.
இப்படியான சூழலில், அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் சரவணன், பாஜக தலைவர் அண்ணாமலை மீது இன்று மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார். இந்த கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.