“விஜய், சீமான், அன்பில் மகேஷ்.., எந்த லட்சணத்தில் இப்படி பேசுகிறார்கள்?” அண்ணாமலை ஆவேசம்!
தேசிய கல்விக்கொள்கை பற்றி பேசுகையில் விஜய், சீமான், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

சென்னை : தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதி தர முடியவில்லை என்பது போல பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக தவிர்த்து திமுக, அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக என பல்வேறு கட்சியினரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
திமுக சார்பில் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என பலரும் தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிக்க பார்க்கிறார்கள் என்ற கண்டனங்கள் வலுத்து வருகிறது. இப்படியான சூழலில் நேற்று வீடியோ மூலம் தேசிய கல்வி கொள்கை பற்றி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார் .
தமிழக பள்ளிகளில்..,
இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ஆளும்கட்சி (திமுக) அமைச்சர்களே மும்மொழி கொள்கை என்றால் அது ஹிந்தி தான் என தவறான பிரச்சாரத்தை செய்கின்றனர். இன்று தமிழகத்தில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஓராண்டுக்கு முன் தமிழக சட்டப்பேரவையில் அளித்த தகவல் அடிப்படையில் 52 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் பயில்கின்றனர். 56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் பயில்கின்றனர். இதில் சிபிஎஸ்சியில் மட்டுமே ஹிந்தி மொழி மூன்றாவது மொழியாக கட்டாயமாக இருக்கிறது. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்தார்கள் என்றால் தமிழ் கட்டாயம் இல்லை. ஆங்கிலம் பயிற்று மொழி கட்டாயம். அவர்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராதி, அரபி, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பிரெஞ்சு என பல மொழிகளில் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம்.
ரூ.30 ஆயிரம் கோடி வியாபாரம் :
52 லட்சம் அரசு பள்ளி மாணவர்களை தமிழக அரசு கட்டாயப்படுத்தி தமிழ், ஆங்கிலம் என இரு மொழி மட்டுமே படிக்க வேண்டும் என கூறுகிறது. இதனால் தனியார் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளி வியாபாரம் மட்டுமே ரூ.30 ஆயிரம் கோடியாகும்.
சீமான் சொன்னது..,
திமுகவை சேர்ந்த நபர் தான் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவராக இருக்கிறார். அவர், தமிழ்நாட்டில் 68 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிப்பதாக கூறுகிறார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது 2016 தேர்தல் வாக்குறுதியில் தமிழ் பயிற்றுமொழி, ஆங்கிலம் கட்டாய மொழி தவிர்த்து 3வது மொழியாக ஹிந்தி உட்பட உலகத்தில் உள்ள எந்த மொழியையாவது படிக்க வைக்க வேண்டும் என.கூறியிருந்தார் அதனை தான் நான் கூறியிருந்தேன். அதுதான் தற்போது தேசிய கல்வி கொள்கையாக உள்ளது.
சி.ஜோசப் விஜய் :
தவெக தலைவர் விஜய் ஒரு தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். விஜய் வித்யாஷ்ரம் எனும் பெயரில் இந்த பள்ளி பதூரில் செயல்பட்டு வருகிறது. சி.ஜோசப் விஜய் தனக்கு சொந்தமான இடத்தை 2017 முதல் 2052 வரையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பெயரில் இயங்கும் அறக்கட்டளைக்கு லீஸ்க்கு விட்டுள்ளார். இப்படி இருக்கையில் என்ன அர்த்தத்தில் பேசுகிறார்கள்? அவங்க நடத்தும் பள்ளியில் ஹிந்தி இருக்கிறது? அன்பில் மகேஷ் மகன் 3வது மொழி படிக்கலாம் என்றால் இவர்கள் எந்த லட்சணத்தில் இப்படி சொல்கிறார்கள்.
ஆதாரம் கொடுங்க..,
திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் சென்னை பப்ளிக் ஸ்கூல் பெயரில் இயங்கும் மெட்ரிகுலேசன் பள்ளியில் தமிழ் கட்டாயம் இல்லை. அங்கு ஆங்கிலம் கட்டாயம் . தமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகள் மும்மொழி கொள்கையில் பாடம் படிக்கிறார்கள். நான் சொன்னதுக்கு ஆதாரம் இல்லை என்றால், நீங்கள் (தமிழக அரசு) கூறிய 10 லட்ச மாணவர்களுக்கு ஆதாரம் கொடுங்க. நான் குறைவாக தான் 30 லட்சம் மாணவர்கள் மும்மொழி கொள்கையில் பாடம் படிக்கிறார்கள் எனக் கூறுகிறேன். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தான் வெள்ளை அறிக்கை விட வேண்டும்.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும் :
உங்கள் குடும்பத்திற்கு ஒரு நியாயம்? ஊருக்கு ஒரு நியாயமா? எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்துறீங்க? மும்மொழி கொள்கையில் ஹிந்தி வேண்டாம் என்றால் வேறு ஏதாவது ஒரு மொழி படிக்க வையுங்கள். மலையாளம், பிரென்ச், உருது என எதோ ஒரு மொழியை படிக்க வையுங்கள். தமிழை மூன்றாவது மொழியாக மற்ற மாநிலங்களில் அமல்படுத்தினால் அங்கு இங்குள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும். எதற்காக மக்களை குழப்பி விடுகிறீர்கள்? அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் டிராமா போடுகிறார்கள். அரசு பள்ளி மாணவர்கள் 3வது மொழியை படிப்பதை தடுக்க பார்க்கிறார்கள். உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா?
1967 ஏப்ரல் மாதம் அறிஞர் அண்ணாவே, எல்லா மாநிலமும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தமிழகத்திலும் ஏற்றுக்கொள்வோம் என கூறினார். கேரளாவில் தமிழ் புக் அச்சடித்து விட்டனர். அங்க தமிழ் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த எதிர்ப்பு மூலம் பால்படுவது நமது குழந்தைகள் தான்.
கையெழுத்து இயக்கம் :
வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் பாஜக சார்பில் தமிழ்நாடு முழுக்க கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். யாருக்கு எந்த மொழி மூன்றாவது மொழியாக இருக்க வேண்டும் என வீடு வீடாக சர்வே எடுத்து அதனை கோப்புகளாக தொகுத்து ஜனாதிபதியை சந்தித்து அளிக்க உள்ளோம். 90 நாட்களில் இதனை முடித்து கொடுக்க உள்ளோம். 3வது மொழியை தடுத்து அடுத்த தலைமுறையை ஆட்சியாளர்கள் அழித்து கொண்டிருக்கிறார்கள். ” என ஆவேசமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார் .