“விசிகவுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு பாஜக கிழே போகவில்லை!” அண்ணாமலை கடும் சாடல்!
இந்தியாவில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கிறது. உலகின் பெரிய கட்சிகளில் ஒன்றாக பாஜக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை அன்று விகடன் பதிப்பகம் நடத்திய ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடந்த பல்வேறு அரசியல் பேச்சுக்கள், தற்போது தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், விசிக துணை பொதுச்செயலாளராக அப்போது பொறுப்பில் இருந்த ஆதவ் அர்ஜுனா ஒரே மேடையில் கலந்து கொண்டனர். மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டு பேசினார். இது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அடுத்து கட்சி செயல்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அதவ் அர்ஜுனாவை விசிக தலைவர் திருமாவளவன் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இப்படியான அரசியல் சூழலில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விசிக ஆதவ் அர்ஜுனா கட்டுபாட்டில் இருக்கிறதா அல்லது திருமாவளவன் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த விசிக தலைவர் திருமாவளவன், பாஜக அதானி தலைமையில் இருக்கிறதா? அல்லது மோடி தலைமையில் இருக்கிறதா என்று பதில் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனுக்கு திடீரென்று கோபம் வந்து விட்டதாக குறிப்பிட்டார். ” விசிக கட்சி கடந்த 15 நாட்களாக திருமாவளவன் கண்ட்ரோலில் இல்லை என்பது தெரிகிறது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, தான் செல்லவில்லை என்கிறார். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். எங்கள் கூட்டணிக்குள் பிரச்சனை வந்துவிடும் அதனால் நான் செல்லவில்லை என்று காரணம் கூறுகிறார். அதுவும் அவருடைய கருத்து. பிறகு ஆதவ் அர்ஜுனாவை நான் தான் அனுப்பினேன் என்றும் கூறுகிறார்.
அப்படி அனுப்பப்பட்ட ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் பற்றி விமர்சனம் செய்கிறார். அப்படி என்றால் உங்கள் கட்சி உங்கள் கண்ட்ரோலில் உள்ளதா என்று சந்தேகம் வருகிறது. மேலும், இந்த விவாதத்தின் போது பாஜகவை விசிக உடன் ஒப்பீடு செய்கிறார். விசிகவுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு பாஜாக இன்னும் கீழே போகவில்லை. உலகில் உள்ள மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று. இந்தியாவில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. ” என்று தனது விமர்சனத்தை முன்வைத்து பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.