திமுகவின் கொ.ப.செ ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவா.? அண்ணாமலை கடும் விமர்சனம்.!

Judge Chandru - BJP State President K Annamalai

சென்னை: தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் விசாரணை குழுவை அமைத்து, மாணவர்களிடையே நிலவும் சாதி மத பேதங்களை களைய உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரியிருந்தது. அதன்படி, சில மாதங்கள் ஆய்வு செய்து 650 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒருநபர் விசாரணை குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

நெற்றியில் திலகமிட கூடாது என, கையில் கயிறு கட்ட கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளை அந்த அறிக்கையில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த அறிக்கைக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அறிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், பள்ளிக்கூடத்தில் சாதி பிரிவினைக்கு கடிவாளம் போட வேண்டும். ஆனால், முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கையை ஏற்க முடியாது,

அதில் ஏற்க முடியாத பல அம்சங்கள் உள்ளன. அந்த அறிக்கையில் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்தினால் பள்ளி கல்லூரிகளில் சாதி ரீதியான பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை முழுவதுமாக எதிர்ப்பதாக அண்ணாமலை கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்மையில் ஓசூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கூறுகையில், நான் அறிக்கையை தயார் செய்து, அந்த அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினேன். அதில் என்ன உள்ளது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அப்படி இருக்கையில், அண்ணாமலை எப்படி எனது அறிக்கையை முழுவதுமாக நிராகரிப்பதாக கூறுகிறார்.?

அறிக்கையை படிக்காமலே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு அரசியல் கட்சி தலைவர் (அண்ணாமலை), நான் எனது சொந்த கருத்துகளை எல்லாம் அறிக்கையில் சொல்லி இருப்பதாக கூறுகிறார். 650 பக்கமும் எப்படி சொந்த கருத்துக்களை ஒருவரால் சொல்ல முடியும்.?  அந்த கட்சியின் சார்பில் எனது அறிக்கையை முழுதாக நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு உள்ளனர். மக்கள் படித்து முன்னேறி விட்டால் அவர்களை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று இவ்வாறு அவர்கள் செய்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருந்தார் நீதிபதி சந்துரு.

சந்துருவின் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் திமுக அரசின் குழுவில் இருந்து கொண்டு, நூலகம், அறநெறி, கலாச்சாரம் குறித்து சந்துரு எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். எங்களது எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது சந்துருவின் பதிலிலிருந்து தெரிகிறது. நாங்கள் கூறியது தமிழக அரசு நிர்ணயம் செய்த ஒருநபர் குழுவின் அறிக்கை பற்றி. எங்கள் விமர்சனத்திற்கு பதிலளிக்க வேண்டியது தமிழக அரசு தானே தவிர சந்துரு எனும் தனிமனிதர் அல்ல எனக்கு குறிப்பிட்டு,

தனது அறிக்கைக்கு வந்த எதிர்ப்புகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் நீதிபதி சந்துரு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் அவதாரம் எடுத்துள்ளார் என்றும், திமுகவின் கொள்கைகளை அறிக்கையாகக் கொடுத்தால், பொதுமக்களிடையே எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வரும் என்பதை, அவர் இனியாவது உணர வேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்