எடப்பாடி பழனிச்சாமி ஓர் நம்பிக்கை துரோகி.? அண்ணாமலை கடும் தாக்கு.!
விழுப்புரம்: நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு பொருத்தமாக இருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்..
இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் ரகசியம் தெரிந்தும் அவர் அதிமுகவை விமர்சனம் செய்கிறார். கோவை தொகுதியில் அண்ணாமலை பெரும் தோல்வி என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவர் பேசுகையில், சில தலைவர்களின் சுய லாபத்திற்காக அதிமுக அழிந்து கொண்டு இருக்கிறது. அதிமுகவினர் பெரும்பாலனோர் பாஜகவை நோக்கி வருகின்றனர்.
நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக பொருத்தமாக இருக்கும். ஒரு சமயத்தில் எடப்பாடியை பிரதமர் மோடி அருகில் அழைத்து அமர வைத்தார். அப்படி இருந்தும் அங்கிருந்து இங்கு வந்து பாஜக கூட்டணியே வேண்டாம் வென்று கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி.
2024 தேர்தலில் அதிமுக 134 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து உள்ளது. அதனை எப்போது நிறைவேற்றி தரப்போகிறார்.? கோவைக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம். ஆனால் ஒரு எம்.பி கூட இல்லாமல் எப்படி எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதியை நிறைவேற்றுவார்?
கோவையில் 6 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டே வெறும் 17 சதவீதம் தான் வாக்கு பெற்றது அதிமுக. 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இல்லை. ஆனால் நாங்கள் 34 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். எடப்பாடி சரித்திரம் எல்லாருக்கும் தெரியும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது விமர்சனத்தை முன்வைத்து செய்தியாளர்களிடம் பேசினார்.