பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!
கோவையில் அனுமதியின்றி கறுப்பு தின பேரணி நடத்த முயன்றதால் பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட பாஜகவினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கோவை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடல் டிசம்பர் 17இல் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்.ஏ.பாஷா இறுதி ஊர்வலத்திற்கு தமிழக காவலத்துறை அனுமதி அளித்து இருந்தது. இதனை கண்டித்து பாஜக சார்பில் இன்று கருப்பு தின பேரணி நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இதனை அடுத்து, இன்று கருப்பு தின பேரணியில் உரையாற்றி முடித்துவிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியில் ஈடுபட முயன்றனர். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பேரணியில் ஈடுபட முயன்ற பாஜகவினரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாஜகவினரை கோவை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.