பாஜக RCB., அதிமுக CSK.! ஜெயிச்சிட்டே இருப்போம்..! ஜெயக்குமார் பேட்டி.
சென்னை: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றன. கடந்த முறை ஒன்றாக போட்டியிட அதிமுக – பாஜக, இந்த முறை தனி தனி அணியாக போட்டியிட்டும் தோல்வியடைந்தனர்.
இதுகுறித்து இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக – அதிமுக கூட்டணி பிரிந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, அண்ணாமலையும் பதில் கருத்து தெரிவித்தார். இபிஎஸ்-க்கும் , எஸ்பி.வேலுமணிக்கும் உள்கட்சி பிரச்சனை எனவும் விமர்சனம் செய்தார் அண்ணாமலை.
இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், வாக்கு சதவீதம், கருத்துகள், வாக்குப்பதிவு விவரங்கள் என இன்னும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி போல தான் அண்ணாமலை செயல்படுகிறார்.
கடந்த 2014இல் அதிமுக தலைமையில் தனித்து களம் கண்டு 38இல் வெற்றி பெற்றோம். அப்போது பாஜக – பாமக கூட்டணி எவ்வளவு வாக்கு வாங்கினார்கள்.? அதனை சொல்ல மறுக்கிறார் அண்ணாமலை. 8 முறை பிரதமரை தமிழகம் அழைத்து வந்தார் அண்ணாமலை. ஆனால் ஒரு சீட் கூட வெற்றிபெறவில்லை .
கன்னியாகுமரியில் அவர்கள் (பாஜக) பலம் என்று சொல்கிறார்கள் ஆனால் அங்கு தோல்வி. தருமபுரியில் பாமகவுக்கு வாக்கு வங்கி அதிகம். ஆனால் அங்கு கூட தோத்துட்டாங்க. ஐபிஎல்-இல் தோற்றுகொண்டே இருக்குமே RCB (பெங்களூரு) அணி போல பாஜகவும் தோற்றுக்கொண்டே வருகிறது.
நாங்க (அதிமுக) CSK. 30 வருஷமா ஆட்சி செய்துள்ளோம். இனி வரும் தேர்தலில் ஜெயிப்போம். தேசிய அளவில் கூட பாஜக பெரிய வெற்றி பெறவில்லையே. வடக்கில் கூட பாஜவுக்கு ஆப்பு வச்சிட்டாங்க. பிரதமர் மோடியை பெரிய தலைவர்னு சொல்லிட்டு இருந்தார். இப்போ நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு தான் கிங் மேக்கரா இருக்காங்க . கேரளாவுல கூட பாஜக ஒரு இடம் வெற்றிபெற்று கால் பதித்து விட்டார்கள். ஆனால் தமிழகத்தில் அதுகூட இல்லை. தமிழகத்தில் என்றுமே திராவிடம்தான் ஜெயிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம தெரிவித்தார்.