கருப்பு உடையில் வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.! ராகுல்காந்தி சஸ்பெண்ட்டிற்கு எதிர்ப்பா.?
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்திருந்த நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கருப்பு உடையணிந்து வந்திருந்தார்.
2019 குஜராத் பரப்புரையில் மோடி பெயருக்கு அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வகையான போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சட்டப்பேரவைக்கு கருப்புச்சட்டை அணிந்து வருகை தந்தனர்.
அதேபோல் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் கருப்பு உடையுடன் சட்டப்பேரவைக்கு வந்திருந்தார். சட்டப்பேரவையில் இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், அவசர கால சூழ்நிலைகளில் ஆளும்கட்சியின் தலைவர்கள் பட்ட சிரமத்தை நினைவு படுத்தும்வகையில் கருப்பு உடையுடன் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.