அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் பாஜக தோற்றது – சிவி சண்முகத்துக்கு, கே.டி. ராகவன் பதிலடி!
பாஜகவால் சிறுபான்மையின வாக்குகள் கிடைக்கவில்லை என்ற சி.வி சண்முகத்தின் கருத்து ஏற்புடையதல்ல என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவன் கருத்து.
விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். நாம் பாஜகவை கூட்டணியாக சேர்த்ததால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு கிடைக்கவில்லை. அதனால்தான் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம்.
பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் நினைத்தனர். கூட்டணி கணக்கு சரியில்லாததால் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து அதிமுகவால் தான் பாஜக தோற்றதாக பொருள்படும் வகையில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், உங்களால் தான் என்ற எண்ணம் எங்களிடமும் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.டி.ராகவன், சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு அதிமுக எடுத்த சில தவறான முடிவுகளே காரணம். பாஜவுடனான கூட்டணியால் அதிமுக தோல்வி என்ற சிவி சண்முகத்தின் கருத்து அதிமுகவின் கருத்தா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவால் தான் தோல்வி என பாஜகவினர் இடையேயும் கருத்து நிலவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். பாஜகவால் சிறுபான்மையின வாக்குகள் கிடைக்கவில்லை என்ற சிவி சண்முகத்தின் கருத்து ஏற்புடையதல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்பது தொடர்பாக அதிமுக – பாஜக மாறி மாறி குற்றசாட்டி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
“உங்களால் தான்” என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு…@CVShanmugamofl pic.twitter.com/aerd7SgIoe
— K.T.Raghavan (@KTRaghavanBJP) July 7, 2021