தமிழகத்துக்கு படையெடுக்கும் பாஜகவின் முக்கிய தலைவர்கள்!
Election2024 : மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் வரவுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பித்தக்க இடங்களை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக மும்மரம் காட்டி வருகிறது. அதன்படி, பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகத்திக்கு பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம், வாகன பேரணி உள்ளிட்டவைகள் மேற்கொண்டார். நேற்று முன்தினம் 2 நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகன பேரணியில் ஈடுபட்டார்.
இதன்பின் நேற்று நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், மக்களவை தேர்தல் பரப்புக்காக 2 நாள் பயணமாக நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகிறார். சிதம்பரம், தஞ்சை, கோவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள இருக்கும் அவர் ஓசூரில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதுபோன்று, மத்திய உள்துறை அமித்ஷாவும் தமிழகம் வரவுள்ளார். அதேசமயம் நீலகிரி மக்களவைத் தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஏப்ரல் 14-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் வாகனப் பேரணி மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.