“பாலியல் வன்கொடுமையை அரசியலாக்க வேண்டாம்” – பாஜக நிர்வாகி குஷ்பூ!
பெண்கள் விளையாட்டு பொருள் அல்ல அவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என பாஜக பிரமுகர் குஷ்பூ பேட்டியளித்துள்ளார்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி தற்போது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக மகளிர் அணி மவுனம் காப்பது ஏன்? என பாஜக நிர்வாகி குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பூ,”ஒரு பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துவிட்டால் அதனை கட்சி ரீதியாக பேசக்கூடாது. நாங்கள் பாஜக சார்பாக இங்கே பேசவில்லை. பாதிக்கப்பட்டது பெண் என்பதால் இப்போது நாங்கள் ஒன்றுகூடி பேசியுள்ளோம். எங்களுக்கு பின்னாடி பாஜக இருக்கிறது அது வேற விஷயம். இதனை அரசியலாக்க வேண்டாம்.
இது பற்றி கூறினால், ‘நீங்கள் ஆளும் மாநிலத்தில் இது நடக்கவில்லையா? அங்க நடக்கலையா?’ என கூறுகிறார்கள். பெண்களை பற்றி பேசுவதற்கு அவர்கள் விளையாட்டு பொருள் அல்ல. பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை நான் நிச்சயமாக பாராட்டுவேன். ஏனென்றால் தைரியமாக முன்வந்து புகார் கொடுத்துள்ளார். நிறைய பெண்கள் பயத்தில் பேச மறுக்கிறார்கள். ‘பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு போன் நம்பர் வாங்கிட்டு நான் எப்போ வர சொன்னாலும் அப்போ வரணும்னு’ சொல்லி மிரட்டியும் அந்த பெண் பயப்படாமல் , நாளைக்கு இதே போல நிலைமை வேறு யாருக்கும் நடக்க கூடாது என அந்த பெண் வெளியில் வந்து பேசியிருக்கிறார்.
தகவலை வெளியில் கொடுத்தவர்களை முதலில் தண்டிக்க வேண்டும். டெல்லி நிர்பயா பெயர் கூட ரெம்ப நாள் கழித்து தான் பெயர் கூறினோம். திமுக, அதிமுக, பாஜக என அரசியல் சண்டை ஆக்காதீங்க. அந்த பெண்ணை இன்னும் கேவலப்படுத்த வேண்டாம். அந்த மாநிலத்தையும் இந்த மாநிலத்தையும் இந்த விஷயத்தில் ஒப்பீடு பண்ணாதீங்க. எந்த மாநிலத்தில் அதிகம் என பார்க்காதீங்க. பிரச்சனையை பூசி மொழுகாதீங்க. பக்கத்து வீட்டில் இருக்கும் பிரச்சனை பற்றி ஏன் பேச வேண்டும்? கண்ணாடி வீட்டில் உக்கார்ந்து கொண்டு கல்வீச கூடாது.
இந்த பிரச்சனைக்காக போராடும் போது ஏன் அனுமதி கொடுக்கல? பாமக போராட்டத்தில் சௌமியாவை ஏன் கைது செஞ்சீங்க? திமுக எம்பி கனிமொழி எங்கே? திமுக மகளிரணி எங்கு இருக்கிறது? நாளைக்கு கைதுபண்ணாலும் நாங்க தொடர்ந்து போராடுவோம். திமுகவில் இருந்து ஒரு பெண்ணாவது குரல் கொடுத்தார்களா? ஏன் திமுக பெண்கள் அமைதியாக இருக்கிறார்கள்? மாநில மகளிர் அமைப்பு எங்கே? அவங்க எதுவும் பேசுனாங்களா?” எனத் தெரிவித்தார்.