“வீடியோ வெளியாகிவிட்டது., மன்னித்து விடுங்கள்.,” அண்ணாமலை பரபரப்பு டிவீட்.!
நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், கோவையை சேர்ந்த அன்னபூர்ணா சீனிவாசன் எனும் ஹோட்டல் அதிபர் ஜி.எஸ்.டி குறித்து தனது கோரிக்கையை வெளிப்படையாக கேட்டது, அதன்பிறகு இன்று அன்னபூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோக்கள் ஆகியவை வெளியாகி தற்போது தமிழக அரசியல் முதல் இந்திய அரசியல் வரையில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கோவையில் நடைபெற்ற சிறுகுறு மற்றும் ஹோட்டல் அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா சீனிவாசன் கேள்வி எழுப்பியதால், அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
ஆனால், இன்று கோவையில் தனியார் ஹோட்டலில் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சரிடம் மன்னிப்பு கோரிய வீடியோவும் இணையத்தில் வெளியானது அரசியல் வட்டாரத்தில் வேறு விதமாக பேசுபொருளாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அன்னபூர்ணா சீனிவாசன் அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “தமிழ்நாடு பாஜக சார்பாக, மதிப்பிற்குரிய வணிக உரிமையாளருக்கும் மதிப்புக்குரிய எங்கள் நிதியமைச்சருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடலைப் பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் (பாஜகவினரின்) செயலுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளரான சீனிவாசன் அவர்களுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணா தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார், மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” அன்னபூர்ணா சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
On behalf of @BJP4TamilNadu, I sincerely apologise for the actions of our functionaries who shared a private conversation between a respected business owner and our Hon. FM.
I spoke with Thiru Srinivasan Avl, the esteemed owner of the Annapoorna chain of Restaurants, to express…
— K.Annamalai (@annamalai_k) September 13, 2024