ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பெயர்தான் பாஜக..! திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பெயர்தான் பாஜக என்று திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திராவிட கழகம் சார்பில் சமூக நீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி பங்கேற்றார்.
சுயமரியாதை திருமணம் :
இதில் சுயமரியாதை திருமணத்தை பற்றி பேசிய அவர், அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் கிராமத்தில் தான் முதலில் சுய மரியாதை திருமணம் நடந்ததாகவும், தன்னுடைய திருமணத்தை 1958 ஆம் ஆண்டு பெரியாரும், மணியம்மையும் இணைந்து நடத்தி வைத்ததாகவும் கூறினார்.
பாஜக ஆட்சி :
பின்னர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பெயர் தான் பாஜக என்று கூறிய அவர் பாஜக ஆட்சி சுதந்திர ஆட்சி கிடையாது, ஆர்எஸ்எஸ்-ன் உத்தரவை தான் பாஜக பின்பற்றுகிறது என கூறினார். கோட்சே பயிற்சி எடுத்த களம் தான் ஆர்எஸ்எஸ், சமூக நீதியில் கை வைக்க கூடிய துணிச்சல் எந்த கட்சிக்கும் கிடையாது என மேலும் கூறினார்.
திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சி :
இதையடுத்து சமூக நீதி, இட ஒதுக்கீடு இல்லை என்றால் நம் பிள்ளைகள் படிக்க முடியாது. திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகியதால் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என கூறினார். வீடு தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் மூலம் நல்லாட்சி நடந்து வருவதாக கூறினார். பெரியார் இல்லையென்றால் யாரும் படித்திருக்க முடியாது. அதை காப்பதற்கு பாடுபட்ட இயக்கம் தான் நமது இயக்கம் என்று கூறினார். தற்பொழுது அதை ஒழிக்கக்கூடிய வகையில் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு என்று கி.வீரமணி கூறியுள்ளார்.