`இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.வும், `ஏமாற்று அரசியல்’ செய்யும் அ.தி.மு.க.வும்..! – அமைச்சர் உதயநிதி

Udhayanidhi

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் தல பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், `இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.வும் `ஏமாற்று அரசியல்’ செய்யும் அ.தி.மு.க.வும் 2024-மக்களவைத் தேர்தலில் வீழ போவதை உறுதி செய்தன. போலி அரசியலை வீழ்த்தி, மாநில உரிமையை உயர்த்திப் பிடிக்க அயராது உழைப்போம் என தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.-வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில், அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. இந்தத் தெளிந்த நீரோடையை அவதூறு பேச்சு, சர்ச்சை, சாதி-மதத் துவேஷம் போன்ற அழுக்குகளைக் கொட்டி குழப்பிவிட்டு, பிறகு அரசியல் செய்ய நினைக்கிறது.

தமிழக ஆளுநர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார் – அமைச்சர் பொன்முடி

ஆனால், பல சமயங்களில் அழுக்கைக் கொட்டும்போதே பிடிபட்டு அம்பலப்பட்டு விடுகிறது. ‘யாருக்கும் தெரியாமல் அழுக்கைக் கொட்டிவிட்டோம்’ என்று நினைக்கையில், சி.சி.டி.வி காட்சிகள், சாட்சியங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டு முகமூடி கிழிக்கப்படுகிறது. தங்களின் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்வதுதானே சிறந்த அரசியலாக இருக்க முடியும். அந்தக் கொள்கைப் பயணத்தில் இளைஞர்களைக் கொள்கை ரீதியாக வளர்த்தெடுத்து, அவர்களைத் தலைவர்களாக உருவாக்கி, மக்கள் பிரதிநிதிகளாக உயர்த்தி, அவர்கள் மூலம் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி….என அது ஒரு நீண்ட நெடிய பயணம்.
அதைத்தான் பெரியார்-அண்ணா-கலைஞர் போன்றோரெல்லாம் பின்பற்றிச் சமூக நீதி, மாநில சுயாட்சி அரசியலைக் கையிலெடுத்து, தமிழ்நாட்டை  வளர்த்தெடுத்தனர்.

அவர்களின் தொடர்ச்சியாகத்தான் நம் தலைவர் அவர்கள் இன்று கழகத்தையும் தமிழ்நாட்டையும் வழிநடத்தி வருகிறார். ஆனால், ‘இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.விடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி, நாளையே கோட்டைக்குள் சென்றுவிடவேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது.

இந்தப் போலி அரசியல்பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்படி உருவாக்கப்படும் இந்தப் பரபரப்புகளால் வரும் ஊடக வெளிச்சத்தைத் தன் மீது வாங்கிக்கொண்டு மறுபக்கம் அ.தி.மு.க.வைப் பாதுகாக்கவும் நினைக்கிறது. பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு, தனித்துப் போட்டி போன்றவை அந்த நாடகத்தின் சில
அத்தியாயங்கள்தான்.

இந்த நாடகத்தில், ‘தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுத்தவர்கள்’, ‘நீட் தேர்வை நுழையவிட்டு, 20-க்கும் மேற்பட்டோரின் சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள்’, ‘ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறப்புக்கு காரணமானவர்கள்’, மக்களின் வரிப் பணத்தில் பல லட்சம் கோடி ரூபாயைச் சுருட்டியவர்கள்’ என்ற அ.தி.மு.க. மீதுள்ள ஊழல் கறையை, இரத்தக் கறையைக் கழுவிவிடப் பா.ஜ.க. நினைக்கிறது.

‘பூசியவர்களே கறைகளைக் கழுவியும் விடுகிறார்களே’ என்று எடப்பாடியும் கைகளைக் காட்டிக்கொண்டு நிற்கிறார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது, பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்குகள் போன்ற முக்கியமான பல வழக்குகளைச் சி.பி.ஐ கிடப்பில் போட்டிருப்பது போன்றவை எல்லாம் அதைத்தான் உணர்த்துகின்றன.

சமீபத்தில், மதுரையில் நடைபெற்று முடிந்த ஒரு கட்சியின், மாநாட்டில் அதன் கொள்கைகள் குறித்துப் பேசப்பட்டதா, அந்தக் கட்சியின் ஆட்சியின் சாதனைகளாக எதுவும் விவாதிக்கப்பட்டதா? அந்த ‘புளி சாத மாநாடு’ போல் இல்லாமல் நம் இளைஞர் அணி மாநாடு நம் கொள்கைகளைப் பேசக்கூடியதாக, நம் தலைவர்களின், கழக அரசின் சாதனைகளைப் பட்டியலிடும் வகையில், நம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து நம் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கும்” என்ற உறுதியையும் அவர்களுக்கு அளிக்கிறேன்.

கழக நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள், நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பூங்கொத்து அளிப்பது, பொன்னாடை – மாலை அணிவிப்பது, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது போன்ற தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிருங்கள். கழக வேட்டி – துண்டு மற்றும் புத்தகங்களை அன்பளிப்பாக அளியுங்கள். அவை தேவையானோருக்கு பயன்படும். விரும்புவோர் சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை; இளைஞர் அணி வளர்ச்சி நிதியாக அளியுங்கள் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்