பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தில் பாஜக ஆய்வுக்குழு!
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் தொடர் கைதுகளை தொடர்ந்து, தேசிய தலைவர் ஜேபி நட்டவால் அமைக்கப்பட்ட பாஜக ஆய்வு குழு தமிழகம் வந்து ஆய்வு நடத்தி வருகிறது. சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்று, தூத்துக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி ஜான் ரவி, சமூக வலைத்தளத்தில் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி அவர் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதற்கு முன்னரும், சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்கள் கூறியதாக மேலும் சில பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்ட்டுள்ளனர்.
இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது – ஈபிஎஸ்
இதனால், தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ள பாஜக தேசிய தலைமை புதிய குழுவை நியமித்தது. தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் தமிழக அரசால் அடிக்கடி பொய் குற்றசாட்டுகளால் கைது செய்யப்படுவதாக கூறி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குழு ஒன்றை அமைத்தார். அந்த குழுவில், முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தீஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர் மோகன், மும்பையின் முன்னாள் காவல் கண்காணிப்பாளருமான சத்ய பால் சிங் உள்ளிட்ட 4 பேர் உள்ளனர்.
இந்த குழுவானது தொடர்ச்சியாக எந்த காரணத்திற்காக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுகிறார்கள் என ஆய்வு செய்து கட்சி தலைமைக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அந்தவகையில், இந்த குழு நேற்றைய தினம் சென்னை வந்தது. தற்போது இந்த குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இல்லத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்திற்கு பாஜக ஆய்வுக்குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அப்போது, தொடர் கைது குறித்த விவரங்கள், பாஜக நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்து கேட்கப்பட்டு ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.