காலையில் பாஜக.. மாலையில் பாமக..வேகமெடுக்கும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை..!
அதிமுக – பாமக இடையே தொகுதிப் பங்கீடு இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார். இதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் ,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக – பாமக இடையே தொகுதிப் பங்கீடு இன்று இறுதி செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் லீலா பேலஸ் ஹோட்டலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அதிமுக பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.