HRaja: பாஜக ஆட்சிக்கு வந்தால், காவல்துறையின் யூனிபார்ம் கலரை ‘காவியாக’ மாற்றுவோம் – ஹெச்.ராஜா

hraja

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், காவல்துறையின் சீருடை நிறத்தை ‘காவியாக’ மாற்றுவோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலி சனாதனம் குறித்து பேசியதை கண்டித்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலகக் கோரியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு பகுதியாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி திருவானைக்காவலில் உள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னரே அந்த அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் தள்ளுமுள்ளும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து தடையை மீறி முற்றுகைப் போராட்டத்திற்கு முயன்றதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, மலேரியா, டெங்கு, கொரோனா போன்று சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னால் என்ன அர்த்தம். 80 சதவீத இந்துக்களை இனப் படுகொலை செய்வேன் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

இதே வார்த்தையை நான் சொல்லியிருந்தா விட்ருப்பாங்களா. இதுவரை அவரை கைது செய்யவில்லை, இங்குள்ள காவல்துறையினர் அனைவரும் இந்த போலீஸ் உடையை அணிய தகுதியே இல்லாதவர்கள். அரசாங்கம் சம்பளம் வாங்கும் நேர்மையான அதிகாரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்திருப்பார்கள். அதை செய்யாம, எந்த தப்பும் பண்ணாத என்னை புடிக்க வந்திருந்தா என்ன அர்த்தம்? என கூறியுள்ளார்.

உதயநிதியின் கைக்கூலிகளாக தான் இருக்கின்றனர். இந்துக்களை இனப்படுகொலை செய்வேனென்று சொன்ன உதயநிதி ஸ்டாலினை, அடியோடு அரசியல் களத்திலிருந்து நீக்குகின்ற வரை எங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார். பொய்களை உண்மையாக பேசுகின்ற ஒரு தீயவர் கூட்டம் தான் இந்த திராவிடர் இயக்கம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு காலம் வரும் திராவிட இயக்கங்கள் இல்லாமல் அழித்து, பாஜக கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்போது காவல்துறையின் யூனிபார்ம் கலரை ‘காவியாக’ மாற்றுவோம்” என கூறினார்.  சீருடையின் நிறத்தை அரசாங்கம் வைப்பது தானே, நான் சொல்லவில்லை, அரசாங்கமே சொல்லும். அதனால் எப்போ பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருதோ அன்றைக்கு காவல்துறைக்கு காவிதான் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்