தமிழர்களை பாஜக அடையாளம் காட்டுகிறது – ஜெயக்குமார்
ஒரே நாளில் ஒன்பது கொலை நடந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.
சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமனம்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இன்று காலை சென்னையில் பாஜக அலுவலகத்திற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் அளித்தார். அவரும் இதனை ஏற்றுக்கொண்டார்.
தமிழர்களை அடையாளம் காட்டும் பாஜக:
மேலும், வரும் 18ம் தேதி ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறேன் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழர்களை ஆளுநர்களாக்கி அழகு பார்க்கும் கட்சி பாஜக மட்டும்தான். தமிழர்களை பாஜக அடையாளம் காட்டுகிறது என தெரிவித்தார்.
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு:
மேலும், ஒரே நாளில் ஒன்பது கொலை நடந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல்துறையை கையில் வைதுகொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படாமல் இருக்கிறார். குற்றம் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி நடந்தாலும் 24 மணிநேரத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். எங்கள் ஆட்சியில் இதுபோல் மோசமாக இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.