டெல்லியில் பாஜக தலைமையில் ஆலோசனை கூட்டம்.! இபிஎஸ், ஜி.கே.வாசன், அன்புமணிக்கு அழைப்பு.!
பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமாக இருப்பதால் பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளான. ஏற்கனவே, காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அதன் பிறகு வரும் 17,18ஆம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல, ஆளும் பாஜகவும் தங்கள் ஆதரவு கட்சிகளை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் வைத்துள்ள அதே 18ஆம் தேதி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கு பாஜக ஆதரவு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிவசேனாவின் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த அஜித் பவார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாய்டு ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, தமிழகத்தில் அதிமுக சார்பில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக ஜி.கே.வாசனுக்கும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஓபிஎஸ் தரப்புக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்பவில்லை என தெரிகிறது. வரும் 18ஆம் தேதி தமிழகத்தில் இருந்து யார் டெல்லி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என்பது விரைவில் தெரியவரும்.