மாநிலத்தை துண்டாட துணிந்து விட்டது பாஜக – கே.பாலகிருஷ்ணன்
மாநிலங்களைத் துண்டுத்துண்டாக சிதைக்க வேண்டும் என்ற சதித் திட்டத்திற்கு ஏதுவாகவே ஒன்றிய பாஜக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.
நேற்று திமுகவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ஆந்திரா,தெலுங்கானா போன்று நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இனி போராட்டம் நடைபெறலாம்.ஆகவே, தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ் நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம்!” என்றும் பாஜக சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா மாநில சுயாட்சியை வலியுறுத்தி பேசியதற்குப் பதிலளிப்பதாக சொல்லிக் கொண்டு, மொழிவழியில் அமைக்கப்பட்ட தமிழ் நாட்டை துண்டாடுவோம் என்றும், அதற்கான அதிகாரம் எங்களுக்கு உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் நச்சுக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களைத் துண்டுத்துண்டாக சிதைக்க வேண்டும் என்ற சதித் திட்டத்திற்கு ஏதுவாகவே ஒன்றிய பாஜக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து, இந்திய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாஜக ஆட்சியை பிடிக்கவும், பிடித்த இடங்களில் ஆட்சியைத் தக்க வைக்கவும், மத அடிப்படையில் மக்களை பிரிப்பது, மாநிலங்களை பிரிப்பது, கட்சிகளை உடைப்பது போன்ற ஜனநாயக விரோத உத்திகளை கையாண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பாஜக-வின் திட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் கண்டன குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.’ என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பாஜக-வின் திட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் கண்டன குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) July 6, 2022