பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பாஜகவினர்.!
கிஷான் திட்டம் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் பாஜகவினர் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 என மூன்று தவணைகளாக உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விவசாய திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் பாஜகவினர் இன்று மனு அளிக்கின்றனர். அதில், தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர். இந்த மனுவில், கிஷான் திட்டத்தில் விவசாயியாக இல்லாதவர்கள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், விவசாயியாக அல்லாதவர்கள் இந்த திட்டத்தில் பலன் அடைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து கிசான் திட்டத்தை முறைப்படி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் படி நடைமுறைப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சை மாவட்ட பாஜக வினர் மனு அளித்தனர். பாஜக தஞ்சை மாவட்ட தலைவர் பாஸ்கர் தஞ்சை மாவட்ட பாஜக விவசாயிகள் அணி தலைவர் வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, பாஜக மாநில தலைவர் எ.ல் முருகன் கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக அனைத்து மாவட்டத்திலும் மனு அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.