கமலாலயத்தில் பாஜக மைய குழு கூட்டம் தொடங்கியது..!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அதிமுக – பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். அதிமுக சார்பில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜவுடன் கூட்டணி இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அதிமுகவின் இந்த முடிவு குறித்து பாஜக தேசிய தலைமை பதிலளிக்கும் என தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, டெல்லி சென்ற அண்ணாமலை அவர்கள், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது, சென்னை, கமலாலயத்தில் தமிழக பாஜவின் மைய குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.