“சூடான பிரியாணி”.. தூய்மை பணியாளர்களுக்கு பரிமாறி அவர்களோடு சேர்ந்து சாப்பிட்ட முதல்வர்!
சென்னையில் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாரி அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்திய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் தாக்கம் ஏற்படாமல் தற்போது மழை மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இதன் காரணமாகப் பழைய படி சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறது.
சென்னையில் கனமழை பெய்த போது தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக விரைவாகப் பல இடங்களில் நீர்த் தேக்கம் குறைந்தது. அந்த சமயம், தூய்மை பணியாளர்களும் அயராமல் உழைத்து தங்களுடைய வேலையைச் சரியாகச் செய்தனர் என்றே சொல்லலாம்.
எனவே, கடந்த 2 நாட்களாக வெள்ள நிவாரண பணிகளில் அயராமல் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்குப் பாராட்டு அளிக்கும் விதமாக அவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உணவு வழங்கினார். சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்காக அசைவ உணவு சமைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று நேரில் வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கைகளால் தூய்மை பணியாளர்களுக்காகப் பிரியாணியை பரிமாறினார். உணவு பரிமாறி முடித்த பிறகு, தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவும் அருந்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், பலரும் முதல்வர் செயலை பாராட்டி வருகிறார்கள்.
சென்னையில் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு அசைவ விருந்து பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்..🥰❤️👌@mkstalin#CMMKStalin #ChennaiRains pic.twitter.com/jLn9lVWyPy
— Srihari.. (@Sri32998157) October 17, 2024