முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை…! கோவைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை..!
பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கோவைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர்.
நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை நிரம்பி உள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
பில்லூர் அணையின் பாதுகாப்பு காரணமாக திறந்துவிடப்படும் உபரி நீரானது, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ இறங்க வேண்டாம் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து 2 குழுக்கள் கோவைக்கு விரைந்துள்ளது.