இன்றைய பட்ஜெட்டில் மாபெரும் 7 தமிழ்க்கனவு – தமிழ்நாடு அரசு
கடந்த 12-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில், இன்று தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தமிழக அரசின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னராசு முதல் முறையாக தாக்கல் செய்கிறார். இதன்பின் நாளை வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். நாளை மறுநாள் 2023-24 ஆண்டுக்கான முன்பண செலவு மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்..!
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு நேற்று பட்ஜெட் இலச்சினை (முத்திரை சின்னம்) வெளியிடப்பட்டது. அதில் “தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி” என்ற வாசகம் இடம்பெற்றது. அதுமட்டுமில்லாமல், மாபெரும் 7 தமிழ்க் கனவு என்ற பெயரில் தமிழக அரசின் பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
அதாவது, இன்று பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் 7 முக்கிய அம்சங்கள் குறித்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகியவை இன்று தாக்கலாகும் பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சங்களாகும். இதானால் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வாய்ப்புள்ளதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.