பாரத் நெட் டெண்டர் ரத்து ! அமைச்சர், அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – உதயநிதி
முறைகேட்டுக்கு காரணமான அமைச்சர், அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் “பாரத் நெட்” திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களுக்கு “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தநிலையில், டெண்டர் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் இன்று டெண்டரை ரத்து செய்தது.
இந்நிலையில் இது குறித்து திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ரூ.1950 கோடி செலவில் 12,524 கிராமங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தர கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. திமுகவும் வழக்கு தொடர்ந்தது. எடப்பாடி அரசின் விளக்கத்தை ஏற்காத மத்திய அரசு டெண்டரை ரத்து செய்துள்ளது. கரடியே காறித்துப்பிய மொமன்ட்!கேன்சல் பண்ணிட்டீங்கள்ல, மறு டெண்டர் விட்டுக்குறோம்’ என இதை எளிதில் கடந்துபோகவிடக்கூடாது. முறைகேட்டுக்கு காரணமான அமைச்சர், அதிகாரி, நீதிமன்றத்தில் ‘முகாந்திரம் இல்லை’ என்ற லஞ்ச ஒழிப்புத்துறை.. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே மறுடெண்டர் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
‘கேன்சல் பண்ணிட்டீங்கள்ல, மறு டெண்டர் விட்டுக்குறோம்’ என இதை எளிதில் கடந்துபோகவிடக்கூடாது. முறைகேட்டுக்கு காரணமான அமைச்சர், அதிகாரி, நீதிமன்றத்தில் ‘முகாந்திரம் இல்லை’ என்ற லஞ்ச ஒழிப்புத்துறை.. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே மறுடெண்டர் குறித்து முடிவு செய்ய வேண்டும்!
— Udhay (@Udhaystalin) June 27, 2020