சனாதன தர்மம் விவகாரம்: அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் சம்மன்
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் மார்ச் 4ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதையடுத்து அவருக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூருவைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக வரும் மார்ச் 4-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு உதயநிதிக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!
இது குறித்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தர்மபால் கூறும்போது, “உதயநிதி சனாதன தர்மத்திற்கு எதிரான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று பேசியதோடு தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். இதுபோன்ற பேச்சுக்கள் இந்து தர்மத்தை பின்பற்றுபவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும்” என்றார்.